என்னுடைய வலைப்பக்கத்தில் இருக்கின்ற தமிழ்பகுதிகள் முழுவதுவே முரசு தமிழ் எழுத்துருக்களைக் கொண்டே உருவாக்கப்பட்டவை. அதனால் இங்கே முரசுவின்
இலவச தமிழ் மென்பொருளான அஞ்சலைப் பயன்படுத்தி எவ்வாறு தமிழ் பக்கங்களை
உருவாக்குவது என்பதை நீங்கள் பார்க்க முடியும்.
ஒரு வலைப்பக்கத்தின் முதல் பகுதி அவ்வலைப்பக்கத்தின் தலைப்புக்கள், அவ்வலைப்பக்கம் கொண்டிருக்கின்ற விசயங்கள், முக்கிய செய்திகள், அவ்வலைப்பக்கத்தை தயாரித்தவர்கள் அவர்களின் முகவரி ஆகியவற்றை விளக்குவதாக அமைந்திருக்க வேண்டும். அத்தோடு அந்த முதல் பக்கத்தின் பெயர் கண்டிப்பாக index.html அல்லது index.htm என்ற பெயரிடப்பட வேண்டும்.
ஒரு வலைப்பக்கத்தினை தயாரிக்க கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவை. இந்த தேவைக்காக பல மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் பல shareware என்ற குறிப்புடனும் சில freeware என்ற குறிப்புடனும் காட்டப்பட்டிருக்கும்.
இலவசமாக மென்பொருட்களை வழங்கும் வலைப்பக்கங்கள் பல கிடைக்கின்றன. உதாரணமாக இந்த வலைப்பாக்கத்திற்குச் சென்று பாருங்கள் http://www.download.com . இங்கே shareware என குறிக்கப்பட்டிருப்பவை முதலில் இலவசமாக பயன்படுத்திக் கொண்டு (ஏறக்குறைய ஒரு மாதம்) பின்னர் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் படியும் அமைந்திருக்கும். freeware அல்லது free என அடையாளப்படுத்தப்பட்டிருப்பவை முற்றிலும் இலவசமாக அமைந்திருப்பவை. இவ்வகை மென்பொருட்களை download செய்தும் நீங்கள் உங்கள் வலைப்பக்கங்களைத் தயாரிக்கலாம். வலைப்பாக்கங்களைத் தயாரிக்க இங்கே கிடைக்கின்ற HTML Editor மென்பொருட்களை முதலில் நீங்கள் தேட வேண்டும். தேடு பகுதியில் இருக்கின்ற தேடு இயந்திரத்தைப் பயன்படுத்தி HTML Editor அல்லது website designing tool என்று குறிப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தி, இப்பகுதியில் தேடுங்கள்.
இம்மாதிரியான மென்பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் வலைப்பக்க்ங்களை அமைப்பது சுலபம். ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இம்முறையில் பயிற்சி மேற்கொள்ளலாம். Microsoft Word பயன்படுத்திய அனுபவம் இருந்தால் இம்முறை உங்களுக்கு நிச்சயமாக சுலபமாக இருக்கும். உங்கள் வலைப்பக்கம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இங்கு எழுத்துக்களின் அளவு, ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த shareware, freeware அகியவற்றை விட பெரும்பாலும் நான் பயன்படுத்துவது windows உடன் சேர்ந்தே வருகின்ற notepad எனும் text editor -ஐ தான். இப்படி செய்யும் போது உங்களுக்கு சுயமாகவே ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கும் திறன் ஏற்படுகின்றது. அத்தோடு பல படங்கள் விசயங்கள் என பல விசயங்களை சேர்க்க நினைப்பவர்களுக்கும் தமிழ் ஆங்கிலம் மற்றும் சில குறிப்பிட்ட மொழிகளை மாற்றி மாற்றி பயன்படுத்த நினைப்பவர்களுக்கும் இந்த முறை நன்மை பயக்கும். ஆக இந்த முறையில் வலைப்பக்கங்களை அமைப்பது எப்படி என்று பாப்போம்.
வலைப்பக்கங்களை உருவாக்க ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவற்றை எப்படி முறையாக பெயரிட வேண்டும், எங்கு சேமிக்க வேண்டும் என்பனவற்றை திட்டமிட வேண்டும். ஒரு நல்ல வழி என்னவென்றால், வலைப்பக்கத்திற்கு தேவையான அனைத்து கோப்புகளையும் ஒரு தனிப்பகுதியில் (folder) தகுந்த பெயரிட்டு சேர்க்க வேண்டும். உதாரணத்திற்கு, மருத்துவம் சம்பந்தப்பட்ட ஒரு வலைப்பகுதி ஆரம்பிக்க விரும்புகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். இதற்கு, medical என்ற தலைப்பில் ஒரு folder தயாரிக்கலாம். இந்தப் பகுதியில் உங்களின் index.html மற்றும் பிற html கோப்புக்களை வைக்கலாம். அப்பகுதியில் சேர்க்க விரும்புகின்ற படங்களை image என்ற பெயரில் ஒரு folder க்குள் வைக்கலாம். இவ்வகையில் படங்கள் மற்றும் கோப்புக்கள் சரியான இடத்தில் வைக்கப்பட்டிருப்பது சாத்தியமாகின்றது. இதே வகையிலேயே ஒலி, ஒளி கோப்புக்கள் (audio video files), ஒவ்வொன்றிற்கும் தனித் தனியாக பகுதிகளை முதலிலேயே தயாரித்து வைப்பது சிறந்தது. தேவையற்ற குழப்பங்களையும் தேடுதல்களையும் இவ்வகையில் தவிர்த்து விடலாம்.
இனி ஒரு எளிய வலைப்பக்கத்தை உருவாக்கும் விதத்தைப் பார்ப்போம். பாடங்கள் ஒவ்வொன்றும் வரிசைக் கிரமமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வரிசைக் கிரமமாக வாசித்து பின்னர் முயற்சி செய்து பாருங்கள்.
இப்போது பயிற்சிக்குச் செல்லலாமா........?
பயிற்சி 1 - முதல் பக்கத்தை உருவாக்குதல்
பயிற்சி 2 - தொடர்புகளைக் கொடுத்தல், படங்களை இணைத்தல்
பயிற்சி 3 - கட்டங்கள் உருவாக்குதல்
பயிற்சி 4 - Frame ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்களை இணைத்து ஒரு பக்கத்தை நிறுவுதல்
பயிற்சி 5 - இசை மற்றும் வீடியோ கோப்புக்களை இணைத்தல்
|
|