![]() |
![]() |
![]() |
||||||||||
|
|
|
|
||||||||||
|
|
|
|
||||||||||
|
|
||||||||||||
![]() |
தமிழுக்கு தகவல் புரட்சி தரும் புதிய திணைநா.கண்ணன்
சாரம்:சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியனார் வகுத்த ஐந்திணைக் கோட்பாட்டில் புதிய திணைகளை உள்வாங்கிக் கொள்ளும் கட்டமைப்புள்ளது. வாழும் நிலத்தின் நீட்சியாக மனிதனும், அந்நிலம் அவனுள் எழுப்பும் உணர்வுகளுக்கு இடமாக உரிப்பொருளும், இவை சேர்ந்து முழுமையுற்று கருப்பொருளாகவும் ஐந்திணைக் கோட்பாடு அமைகிறது. நிலம் என்ற பருப்பொருள், பருப்பொருளும் மனமும் கொண்ட மனிதன், அகம் சார்ந்த மனிதனின் உணர்வுகள், இவைகளுக்கு தாரமாக அமையும் சூட்சும சக்திகள் (கருப்பொருள்) போன்றவற்றைப் பேசும் பண்டைய தமிழ் இலக்கணம் மனிதனின் உளவியற் கூறுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. அந்த வகையில், இன்று தொழில் நுட்பத்தின் பயனாய் வந்துள்ள கணினியும், அக்கணினி தரும் இணையமும், இணையத்தில் விளையும் இலக்கியமும்-வாழ்வும் தமிழ் காணும் ஆறாம் திணையாக மிளிர தமிழ் இடம் கொடுக்கிறது. காடும் காடு சார்ந்த உலகு 'முல்லை' ஆகிறது, மலையும் மலை சார்ந்த உலகு 'குறிஞ்சி' ஆகிறது. வயலும் வயல் சார்ந்த உலகு 'மருதம்' என்றாகிறது, கடலும், கடல் சார்ந்த உலகு 'நெய்தல்' ஆகிறது. கணினித்திரையில் மின் பதிவுகளைக் கண்டவுடன் உளப்பரப்பில் உருவாகும் உணர்வுகள் எழுப்பும் ஒரு அதீத உலகமே ஆறாம் திணையாகும். கணினியும், கணினி சார்ந்த மின்வெளியும், இவை எழுப்பும் உளப்பரப்புமே இன்று தமிழ் காணும் ஆறாம் திணையாகும். இக்கட்டுரை தமிழ் காணும் புதிய திணை பற்றிப் பேசுகிறது.
முன்னுரை:இருபதாம் நூற்றாண்டு அறிவியல் மிளிர்ந்த நூற்றாண்டு. அந்த நூற்றாண்டு கண்ட புதுமைகளுள் ஈடு இணையற்றது, தனி நபர் கணினிகளை இணைத்து வையம் முழுவதும் விரியும் வண்ணம் ஒரு மின்வெளிப் பின்னலை உருவாக்கியது. இப்படி மின்வெளியில் இயங்கி உலகை இணைக்கும் பாலம்தான் 'இணையம்' (internet) ஆகும். [1] மின்வெளி (cyberspace) என்பது இலத்திரன் (electron) கூட்டங்கள் உருவாக்கும் ஒரு உலகமாகும். மனிதனின் சிந்தனைத் திறத்தையும், கற்பனா சக்தியையும் உள் வாங்கி உண்மையின் நிழலாக, ஒரு நகல் உலகு இங்கு படைக்கப்படுகிறது. தொழில் நுட்பம் தந்திருக்கும் வியத்தகு உலகு இது. இவ்வுலகு பொறிகள் நமக்குத்தரும் 'யந்திர' உலகமாகும். பொறிகள் மெல்ல, மெல்ல கணினியின் துணை கொண்டு அறிவுடையனவாக மாறி வருகின்றன [2]. மொழிகள் அறிந்த பொறிகள்தான் இன்று நம் இலக்கணப்பிழையைத் திருத்துகின்றன, நமது பேச்சைப் புரிந்து கொள்கின்றன, அச்சில் வந்த எழுத்தை வாசித்து மறு வார்ப்பு செய்கின்றன! தமிழர்களின் சிந்தனைத் திறம் இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பே நூதனமான ஒரு உளவியல்,சூழலியல், இலக்கிய பகுப்பைத் தந்துள்ளது அப்பகுப்பாய்வு இன்று காணும் மின்னுலகைப் புரிந்து கொள்ள உதவுவதுடன், தமிழுக்கும் கணினி (computer) சார்ந்த இந்த சூட்சும உலகிற்குமுள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டுவதாகவும் அமைகிறது. அதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தமிழர் கண்ட திணைக் கோட்பாடு:தொல்காப்பியம் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காண்கின்ற உலகைத் திணைகளாகப் பகுத்து திணைகளுக்கான உரிப் பொருள், கருப்பொருள், காலம், உணர்வுகள் எனக் கண்டு புற உலகை முதன் முதலில் அகவயப்படுத்தி உள்ளனர் தமிழர்கள் (கி.மு 600 - கிபி 100) [3]. இதனை திணைக் கோட்பாடு என்று சொல்வர். தமிழக நில அமைவு (landscape) நான்கு திணைகளாக முதலில் வகுக்கப்பட்டன. மலையும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த பகுதி முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த பகுதி மருதமென்றும், கடலும் கடல் சார்ந்த பகுதி நெய்தல் என்றும் அழைக்கப்பட்டன. குறிஞ்சி, முல்லை, மருதம் இவை திரியும் போது பாலை உருவாகிறது. அதாவது செழிப்பான நிலப்பரப்பு மனித முயற்சியால் மாற்றப்படும்போது, மேட்டு மண் வளம் திரிந்து செழிப்பற்ற தரிசு நிலமாக மாறுகிறது. இன்று உலகு காணும் சூழல் மாற்றங்கள் இத்தகையனவே. ஐந்திணைகளுக்கு நிலம் சார்ந்த பண்பும், உளம் சார்ந்த பண்புகளும் உண்டு. உதாரணமாக ஒவ்வொரு திணைக்குமுரிய செடி, கொடி, மலர், விலங்கு, பழம் குடி என்பவை இனம் காணப் பட்டுள்ளன. உதாரணமாக மலைப்பகுதியில் மட்டும் மலரும் குறிஞ்சி, தினைப் பயிர், வேடுவர் இவை குறிஞ்சி நிலத்து நிலமைவாகும். இதுபோல், முல்லை நிலத்து மக்களாக ஆயர்கள் இனம் காணப்படுகின்றனர். சிந்தனை உயிரியான மனிதனுக்கு மட்டும் விளங்கக்கூடிய சில விசேட பண்புகளையும் இந்நில அமைவுகள் கொண்டுள்ளன. அவை என்னவெனில், இத்திணைகள் அவனுள் எழுப்பும் உணர்வுகளும் அது சார்ந்த வாழ்வியற் கூறுகளுமாகும். இவை திணை உரிப்பொருளாகும் (interior landscape). குறிஞ்சியில் காதலும், முல்லையில் ஊடலும், மருதத்தில் கூடலும், நெய்தலில் பிரிதலுமென மேலோட்டமாக இதைக் குறிக்கலாம். பாலை நிலம் என்பது முல்லையும், குறிஞ்சியும் தேய்ந்து உருவாகும் ஒரு சாரமற்ற வெளி. இவ்வெளியில் காதலோ, புணர்தல் போன்ற உணர்வுகளோ வருவது அரிது. ஆயின் மரங்களற்ற வெளியில் ஒருவித அவலம், ஒரு சோகம், ஒரு கழிவிரக்கம் தோன்றும் சாத்தியம் அதிகமுண்டு. பாலைத்திணைக்கு உரித்தான பண்புகள் இவையென தமிழ் இலக்கியம் பேசும் போது அதன் உளவியல் உத்தி பளிச்செனப் புலப்படுகிறது. ஐந்திணைக் கோட்பாட்டில் நிலத்தின் நீட்சியாக மனிதனும், இவை சேர்ந்து எழுப்பும் உணர்வுகளாக உரிப்பொருளும். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து முழுமையுறும் போது அங்கொரு 'கருப்பொருளும்' உருவாகிறது! அதாவது, நிலம் என்னும் பொருள் ஐம்பொறிகள் கொண்ட மனித யந்திரம் செயல்படும் வண்ணம் அதற்கொரு தளம் கொடுத்து, உணவு கொடுத்து, சக்தி அளிக்கிறது. மனித யந்திரத்தின் செயல் சூட்சுமமான மந்திர சக்திகளால் இயக்கப்படுகின்றன. கண்ணில் படாத இச்சக்திகளை உள்ளுறை உவமமாக, உருவகமாகக் கண்டு வைத்தான் பண்டையத் தமிழன். இச்சக்திகள் அகம், புறம் சார்ந்த திணைகளின் கருப்பொருளாகின்றன. உதாரணமாக குறிஞ்சியின் காதல் தெய்வம் முருகன். இவன் உருவில் அழகன் (முருகு=அழகு) வடிவில் செஞ்சாந்து நிறத்தினன். குறிஞ்சியில் காலையும், மாலையும் தரும் அழகு, செந்நிறம் இவை அகவயமாகும் போது 'செய்யோன்' என்ற கருப்பொருள் பிறக்கிறது. இது போலவே, முல்லைத் தெய்வமாக மேக வண்ணனான கண்ணனைக் கண்டனர். மழை இல்லையேல் காடுகள் இல்லை. காடுகள் இல்லையேல் அவனியில் மழையும் இல்லை. இப்பிரிக்க முடியாத தொடர்பின், உறவின் அக வடிவே கண்ணன் என்னும் கருப்பொருள். இதைத் தொல்காப்பியம் இப்படி விளக்குகிறது [4]:
மாயோன் மேய காடுறை உலகமும் "தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர்; வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர்; பிறர் பகவதியையும், தித்தனையும் தெயவமென்று வேண்டுவர்" என நக்கீரரும் [5] , "தெய்வம்.... பரிதியஞ் செல்வனும், திகிரியஞ் செல்வியுமெனக் கொள்க" என அடியார்க்கு நல்லாரும் [6] கூறியிருக்கின்றனர். பாலைக்கு 'கருப்பொருள்' தேடிய தமிழ் உள்ளம் அங்கு காதல் தலைவன் கந்தனையோ, காக்கும் குலத்தோன்றல் கண்ணனையோ வைக்காமல் கதிரவனையும், கொற்றவையையும் வைக்கிறது. மண்ணைச் சார்ந்தவர் மாந்தர்கள். கொடு மணல் தரும் மாந்தர் கொடூரமாக இருப்பது இயல்பு. அம்மண் சார்ந்த தெய்வமும் -'வைரத்தை வைரம் கொண்டு' அறுப்பது போல - கோபமான மக்களைத் திருத்த கோபக்கார, கனல் தெரிக்கும் தெய்வங்களே!
தமிழ் இலக்கியம் காணும் ஆறாம்திணை மின்திணைஇதிலிருந்து தெரிவது என்னவெனில் தமிழ்கூறும் திணைகள் என்பவை வெறும் பூகோள ரீதியான சூழலியல், இலக்கியப் பகுப்பாய்வு மட்டுமன்று, அதையும் தாண்டிய உளவியற் பரிமாணம் கொண்டவையாகவே அன்று தொட்டு கண்டு கொள்ளப்பட்டு வந்துள்ளன என்பது. இதைச் சரியாகப் புரிந்து கொண்டால் இன்று தமிழ் மேடையேறியிருக்கும் இயந்திர உலகையும், கணினி சார்ந்த மின்வெளி உலகையும் எந்தவித தயக்கமுமின்றி (technophobia) தமிழனால் புரிந்து கொள்ள முடியும். தொழில் நுட்பம் தந்த சூட்சும உலகான மின்வெளியில் 80களின் தொடக்கத்திலேயே தமிழ் குடியேறிவிட்டது. இவ்வுலகைக் கண்ட இந்திய மொழிகளுள் தமிழ் முதன்மையானது. இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் வலைத்தளங்கள் மின்வெளியில் உள்ளன. தமிழ் இதுவரை கண்ட ஐந்திணைகள் தூலமான நிலப்பரப்பில் அமைந்துள்ளன. ஆனால் மின்வெளி என்பது சூட்சுமமான திணையாக உள்ளது. கணினிகள் என்னும் யந்திரப் பரப்பில், அவை உருவாக்கும் இலத்திரன் உலகில், மனித சிந்தனையின் துணை கொண்டு இத்திணை செயல் படுகிறது. இத்திணையின் உள்கட்டுமானம் இலக்கப்பதிவுகளில் (digital impression) அமைகிறது. அது தனிப்பட்ட மின்னஞ்சலாக இருக்கலாம், பலர் கூடும் மின்னரங்கமாக இருக்கலாம் அல்லது இலட்சக்கணக்கானோர் வந்துபோகும் இலத்திரன் கிராமமாக (digital village) இருக்கலாம். காடும் காடு சார்ந்த உலகு 'முல்லை' ஆகிறது, மலையும் மலை சார்ந்த உலகு 'குறிஞ்சி' ஆகிறது. வயலும் வயல் சார்ந்த உலகு 'மருதம்' என்றாகிறது, கடலும், கடல் சார்ந்த உலகு 'நெய்தல்' ஆகிறது. கணினித்திரையில் மின் பதிவுகளைக் கண்டவுடன் உளப்பரப்பில் உருவாகும் உணர்வுகள் எழுப்பும் ஒரு அதீத உலகமே ஆறாம் திணையாகும். கணினியும், கணினி சார்ந்த மின்வெளியும், இவை எழுப்பும் உளப்பரப்புமே இன்று தமிழ் காணும் ஆறாம் திணையாகும்.
ஆறாம் திணையின் இயல்புகள்:நிஜ உலகில் இல்லாத சில யதார்த்தங்கள் இங்குண்டு. இவை யந்திர, மந்திர சூட்சுமங்கள் கொண்ட மாந்திரீக யதார்த்தங்கள் (magical realism). மின் வெளியில் காலம், வெளி என்பன திரிந்த நிலையில் அல்லது இல்லாத ஒரு தன்மை கொண்டதாக அமைகின்றன. உதாரணமாக, இலத்திரன் வேகத்தில் செயல்படும் மின்வெளியில் நாளை எழுதும் கடிதங்கள் நேற்று பட்டுவாடா ஆகும்! அதாவது கதிரவன் கண்களில் முதலில் விழும் ஜப்பானில் நாள் தோன்றிய பின்னும் கூட, ஆயிரக் கணக்கான மைல்கள் அப்பாலுள்ள அமெரிக்காவில் நேற்றைய பொழுது இன்னும் கழிந்திருக்காது. இந்நிலையில் இலத்திரன் வேகத்தில் செல்லும் ஒரு மின்னஞ்சல் நாளைய தினத்தில் கிளம்பி நேற்றைய தினத்தில் முடிவடையும்! இங்கு காலம் திரிவடைகிறது. வெளி என்பது ஏறக்குறைய இல்லாத நிலை! அனுப்பிய நொடிகளில் மின்னஞ்சல் உலகின் ஒரு கோடியிலிருந்து அடுத்த கோடிக்குப் போய் சேர்ந்து விடுகின்றன. தூரம் என்பது மின்வெளியில் ஒரு பொருட்டே அல்ல. எனவேதான் ஆறாம் திணையில் யதார்த்தமென்பது மாந்திரீக யதார்த்தமாக உள்ளது. ஆறாம் திணை மந்திரத்தன்மை கொண்ட திணை. நாம் எழுதும் எழுத்து ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கானோர் காணும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. இங்கு பிரதி (text) இறவாவரம் பெற்று விடுகிறது. பிரதி என்றும் அழியாமல் எங்கோ ஒரு மூலையில், எங்கோ ஒரு கணினியில் பதிவாகி நிலைத்து விடுகிறது. இப்பிரதியைத் தேடி அழித்தல் என்பது இயலாத காரியம். பாண்டவர் கண்ட மந்திர மாளிகை போல் பிரதிகள் பிரதிபலிக்கும் தடங்களில் (mirror site) சேமிக்கப் பட்டு நீருக்கு, நெருப்பிற்கு, எதிரியின் இலக்கிற்குத் தப்பி நிலை கொள்கிறது. நிஜ உலகில் நூலகங்கள் எரிக்கப்படலாம். புத்தகங்கள் அழியலாம். ஆயின் நகல்/நிழல் உலகில் நூல்களின் வார்ப்புகள், பதிவுகள் நீரில் அழியாமல், நெருப்பில் அழியாமல் நிலைத்து விடுகின்றன. அதிசயமாக, இலத்திரன் வடிவு கொண்ட நூல்களில் நகல் என்பதே இல்லை. அனைத்துமே முதல் நூல் போல் சீரிளமை கொண்டவையே! எடுக்க, எடுக்கக் குறையாமல் மூலம் 'அட்சய பாத்திரம்' போல் வந்து கொண்டே இருக்கும். காதல் மலர அன்னத்தை, மேகத்தைத் தூது விட்ட காலங்கள் போய் மின்னஞ்சல் தூது போக காதல் கண்ணிமைக்கும் முன் அரும்பு விட்டு மலர்ந்து கனிந்து விடுகிறது! இத்திணை காதல், ஊடல் போன்றவைக்கு இடமளித்தாலும் இத்திணையின் உரிப்பொருள் 'நட்பு' ஆகும். இதயங்களை இணைக்கும் இயல்பு கொண்ட இணையம் வழிச் செயல்படும் இத்திணை நட்பிற்கென்றே உருவான திணையாகும். மற்ற திணைகளில் மண்ணின் வாசனை உண்டு. ஆறாம் திணைக்கு மண்வாசனை என்பது கூட்டுக் கலவையாக வந்தமைகிறது. ஐந்திணை மண்களின் வாசமும் இத்திணையில் வீச வாய்ப்புண்டு. கணியன் பூங்குன்றன் இதையறிந்துதானோ கணினிக்கென்று 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சொல்லி வைத்தான். உலகத் தமிழர் அனைவரும் கூடும் பரப்பாக மின்வெளி அமைகிறது. ஆறாம்திணையின் இலக்கியம் எத்தகையது? ஆறாம்திணையில் எழுத்து என்பது படிமங்களை உருவாக்கும் முதற் காரணியாக இருந்தாலும் ஓசை, ஓவியம், ஒளி என்பவை இத்திணைக்கு கூடுதல் பரிணாமத்தைத் தருகின்றன. ஆயினும் இணையத் தமிழ் என்பது இதுவரை எழுத்து சார்ந்தே உள்ளது. எப்படி சினிமா என்ற நிழற்படம் புதிய ஊடகமாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், நாடகத்தின் தாக்கம் பல தசாப்தங்கள் அவ்வூடகத்தில் இருந்தது போல், இணைய இலக்கியம் என்பது எழுத்து சார்ந்த பத்திரிக்கை இலக்கியமாகவே உள்ளது. இணையத்தின் ஓட்டம் அது தரும் தொடர்புப் பின்னலில் உள்ளது. எப்படி மனிதச் சிந்தனை என்பது ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்து வளர்ந்து கொண்டே போகிறதோ அது போலவே இணையத் தகவலும் ஒன்றிலிருந்து ஒன்று கிளைக்க வல்லது. இவ்வமைப்பை இன்னும் தமிழ் இலக்கியம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முன்வரைவுகள் போல் இணையக் கவிதை உலகில் ஒரு சில உதாரணங்கள் கிடைக்கின்றன. காசுமிச்சான் எழுதிய "உரு அறு மெய்தேடல்" என்ற கவிதை தமிழின் முதல் மின்வெளிக் கவிதை யாகும் (cyber poem) [7]. இணையத் தொழில் நுட்பத்தால் எழுத்தாளனுக்கும், வாசகனுக்குமுள்ள தொடர்பு மிக அருகி விடுகிறது. எழுத்தைச் சார்ந்த விமர்சனங்கள், பாராட்டுதல்கள் உடனுக்குடன் பரிமாற்றமடைந்து எழுத்தின் முதிர்ச்சி நிஜ உலகு காணா வேகத்தில் பரிணாமமுறுகிறது!
ஆறாம்திணையின் இலக்கணம் யாது?ஆறாம்திணையின் தன்மைகளை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட இலக்கியங்கள் உருவான பின்தான் இத்திணை இலக்கணம் உருவாகும் என்று நம்பலாம். ஆறாம்திணை என்பது தொன்றுதொட்டு வரும் இலக்கண மரபை மீறும் தன்மை கொண்டதாக உள்ளது. உதாரணமாக ஒரு எழுத்து அமெரிக்காவில் படிக்கப்படும் அதே பொழுது ஜப்பானிலும் படிக்கப்படுகிறது. பூகோள வரையறைகள் தவிடு பொடியாகின்றன. பருவ காலம், நாளின் பொழுது இவை கிளப்பும் உணர்ச்சிகள் என்பவை இணைய இலக்கியத்தில் மாறுபட்டே இயங்க முடியும். பனியில் எழுதும் எழுத்தோவியம் சமகாலத்தில் கோடையில் வாசிக்கப்பட வாய்ப்புள்ளது! எனவே ஐந்திணை உரிப்பொருள் இங்கு திரிபடைகிறது. அது போலவே இணைய இலக்கியமும் கட்டுப்பாடுகளை தகர்த்து எழும் இலக்கியமாக அமைய வாய்ப்புண்டு. அது பொழுது புதிய இலக்கணம் வகுக்கப்படலாம். அவையும் மீறப்படலாம்!
நிஜ உலகும், நிழல் உலகும்!நிஜத்தின் நிழலாக மின்வெளி அமைந்திருப்பதால் நிஜ உலகின் பல கூறுகள் இங்கும் உண்டு. நிஜ உலகில் நோய் உண்டு, நோவு உண்டு. ஆறாம்திணையிலும் அவை உண்டு. 'வைரஸ்' என்னும் கிருமிகள் இத்திணைக்களத்தை தாக்கி அழிக்கக் கூடியன. அதற்கான மாற்று மருந்தும் இவ்வுலகில் உண்டு. நிஜ உலகப் பரிணாமம் (evolution) என்பது பலகோடி வருஷங்கள் எடுத்தால், மின்னுலகப் பரிணாமம் வருடங்களில், மாதங்களில், நொடிகளில் நடந்து முடிந்துவிடுகின்றன. ஒவ்வொரு 18 மாதமும் கணினியின் செயல் திறம் இரட்டிப்பாகிறது. அதுபோலவே கணினியின் சேமிப்புக் கிட்டங்கியின் அளவு பெருகிக் கொண்டே போகிறது. எதிர்கால மனிதப் பரிணாமம் என்பது கணினிகளின், செயற்கை ஞானத்தின் ஊடகவே மலரும் என்பது திண்ணம்.
மின்வெளிக்காப்பகங்கள்:நிஜ உலகில் இலக்கியங்கள் தீக்கிரையாகின்றன, ஆற்று வெள்ளத்தில் நூலகங்கள் அடித்துக் கொண்டு போகின்றன, ஏடு தாங்கும் ஓலைகள், காகிதங்கள் இவை கரையான் வாய்க்கு இரையாகின்றன. மேலும் ஒருமுறை வெளியான புத்தகங்கள் மறுபதிப்புக் காண்பதில்லை, அதற்கான நிதியும் கிடைப்பதில்லை. ஆனால் இவையெல்லாவற்றிற்கும் மாற்று ஆறாம்திணையில் உள்ளது! இங்கு தங்கும் மின்னிலக்கப் பிரதி (மூலம்) தீயில் எரிவதில்லை, நீரில் கரைவதில்லை, பூச்சி வாய்க்கு இரையாவதில்லை. மேலும் மூலம் என்பது என்றும் புதிதாக உள்ளதால் மறுபதிப்பதென்பது எளிதாகிறது. இலத்திரன் பதிப்பு, காகிதப் பதிப்பை விட மலிவானதே. இலத்திரன் பதிப்பை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் படிக்க முடிவதால், மின்வெளி வழிக் கல்வி என்பது இதுவரை கண்ட தொலைதூரக் கல்வியை எளிதாக்கி உள்ளது. இதை மனதில் கொண்டு உருவான திட்டங்கள்தான், இணையத்தில் இயங்கும் தமிழ் இலக்கிய நூலகம் (Project Madurai) [8], மின்வெளித் தமிழ் மரபுக் காப்பகம் (Tamil Heritage Foundation) [9], இணையப் பல்கலைக் கழகம் [10] போன்றவை. உதாரணமாக மின்வெளி முதுசொம் காப்பகம் பற்றிக் காண்போம். தமிழ் மரபு (முதுசொம்) அறக்கட்டளை (Tamil Heritage Foundation) என்பது அரசுசாரா (non governmental), ஈட்டு நோக்கற்ற (non-profit), அரசியலற்ற (non-political) சர்வதேச அமைப்பாகும். மேலைத்திய தொழில் நுட்பத்தை உடனுக்குடன் பயன்படுத்தி தமிழின் கலை இலக்கிய மரபைப் பேணும் ஒரு முயற்சியாகும் இது. தமிழின் பாரம்பரிய சிந்தனைச் செல்வங்கள் பனை ஓலைகளில் எழுதப்பட்டு பராமரிக்கப்பட்டு இதுகாறும் வந்துள்ளன. இலக்கியம் என்பது மட்டுமல்லாது, மருத்துவம், வானவியல், ஜோதிடம், நாவாய் (கப்பல்) சாத்திரம், கோயில் கட்டுதல் போன்ற பிற அறிவியல்/தொழில் நுட்ப ஆய்வுகளும், அதன் சூத்திரங்களும் பனை ஓலைகளிலேயே காணக்கிடைக்கின்றன. உ.வே.சா, தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலர் போன்ற பெரியவர்கள் பதிப்பித்தது மேற்சொன்னவையின் ஒரு கூறே! இன்னும் பதிவு காணாதா சாத்திரங்கள் லட்சக் கணக்கிலுள்ளன. அவை பதிப்பைக் காணும் நாள் என்னாள்? அவை பதிவுறுமுன் அழிவதற்கான சாத்தியங்களே அதிகம். தமிழனின் மரபு சார்ந்த அறிவு என்ன? என உலகு அறியும் முன் அதை அழிய விடுவது நாம் செய்யும் வரலாற்றுப் பிழையன்றோ? தமிழனின் அடையாளம், அவனது பீடு, அவனது எதிர்காலம் இவ்வேடுகளில் உள்ளன என்றால் அது மிகையல்ல. இவைகளை முறைப்படுத்தி இலத்திரன் பதிவுகளாக்கி சேமித்து வைக்க உருவானதே முதுசொம் அறக்கட்டளை. ஏடுகள் என்று மட்டுமல்ல, மறுபதிப்புக் காணா பழைய புத்தகங்கள், பத்திரிக்கைகள், பிற ஆவணங்கள் இம்முறையில் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. மின்வெளி பல்லூடகத் தன்மை வாய்ந்தது. எனவே, ஒலி, ஒளி சார்ந்த ஆவணங்களையும் இம்முறையில் பதிப்பித்து சேமித்து வைக்கலாம். எனவே தமிழின் முதுசொம் காப்பகம் இது. மிகச் சொற்பமான நிதி உதவி கொண்டு இது இன்று ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது. கோலாலம்பூரில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் (ஆகஸ்ட், 2001) இத்திட்டம் முதன் முறையாக முன் வைக்கப்பட்டு, மலேசிய இந்தியன் காங்கிரஸ்ஸின் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களால் இனங்காணப்பட்டு, அமெரிக்க டொலர் 10,000 விதைப் பணமாக பெறப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இக்காப்பகத்தின் ஆவணங்கள் பொது மக்கள் பார்வைக்கு 24 மணி நேரமும் கீழ்காணும் வலைத்தளத்தில் வைக்கப் பட்டுள்ளன: முதுசொம் அறக்கட்டளையின் முன்னுள்ள சவால்கள் எண்ணில. ஆயிரக் கணக்கான ஓலைச் சுவடிகள் நாளொரு வண்ணம் அழிந்து வருகின்றன. அவைகளை ஊர், ஊராகத் தேடி இலக்கப்பதிவாக்க வேண்டும். இதற்கான வாகன, ஆள் வசதி இந்நிறுவனத்திடம் இன்று இல்லை. முக்கியமான ஓலைப் பதிவுகள் தமிழகத்திலுள்ள பெரிய மடங்களிலும், அரசு/தனியார் நூலகங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் முடங்கிக் கிடக்கின்றன. இவைகள் அனைத்தையும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கும் திட்டமிருந்தாலும் அதற்கான நிதி வசதி இன்று எம்மிடம் இல்லை. இலங்கை போன்ற போர் சூழ்ந்த நாட்டில் இலத்திரன் ஆவணப் படுத்துதல் என்பது வேரெங்கிணும் காண முக்கியமாகும். தமிழர் மரபுச் சின்னங்கள் அங்கு முறையாக அரசு ஆதரவோடு அழிக்கப்பட்டு வரும் சூழலில் இத்திட்டத்தின் முக்கியத்துவம் புரியும். உலகு தழுவிய நிலையிலுள்ள தமிழர்கள் மனது வைத்தால் National Geographic Foundation போன்ற அமைப்பில் இதை உருவாக்க முடியும். ஆளுக்கு ஒரு டாலர் கொடுத்தால் கூடப் போதும், மரபுக் காப்பகமென்பது பாரிய அளவில் உருவாகிவிடும்! அன்னிய ஏகாதிபத்தியங்கள் காலனித்துவ பின்னணியில் தமிழர்தம் பாரம்பரியச் செழுமையை தங்களது நூலகங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளன. இன்றுள்ள தொழில் நுட்பத்தில் அவை அனைத்தையும் இலத்திரன் பதிவுகளாக மீண்டும் பெறமுடியும். இதை ஐரோப்பா, அமெரிக்கா/கானடா வாழ் தமிழர்களின் துணை கொண்டு செய்வித்து விட முடியும்.
முடிவுரை:தமிழர் எதிர்காலம் அறிவியல் சார்ந்து, தொழில் நுட்பம் சார்ந்தே எழ முடியும். தமிழரின் எதிர்கால அறிவியல் அதன் கடந்த கால அறிவியலை அறிவதின் மூலமே நடைபெற முடியும். தமிழர் இதுவரை செய்த ஆய்வுகள் என்ன? அதன் பலன்கள் என்ன? நமது பலம் எது? பலவீனம் எது? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகள் அறியப் படாமல் தமிழனக்கு எதிர்காலமில்லை. எனவே, இன்று உலகு காணும் குமுகாயத் தமிழர்கள் (diaspora Tamil) ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். தங்களிடமுள்ள மூலதனத்தை, செயற்திறனை நல்வழிப் படுத்த வேண்டும். தமிழர்களின் நுகர் சந்தை தமிழர்களால் நுகரப் பட வேண்டும். தமிழனின் மூலதனம் தமிழர்களின் நல் வாழ்விற்குப் பயன்பட வேண்டும். தமிழர்களின் மூளைத்திறன் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழருக்குப் பயன்படவேண்டும். வணக் காப்பகம் போல், தமிழர் தமக்கென்று ஒரு சிந்தனைக் கிடங்கு (think tank - brain trust) உருவாக்கப்பட வேண்டும். அதுவே நாளையத் தமிழர்தம் நல் வாழ்விற்கான விதை நெல்லை/முளைப்பாரியை தந்துவ வேண்டும்.
துணை நூல்கள்:
[1] http://www.zakon.org/robert/internet/timeline/ முதற்பதிவு - மின்மஞ்சரி (உத்தமம் மின்னிதழ்) |
|||||||||||
|
|
© Copyright www.e-mozi.com 2006. |