Date: Fri Apr 19, 2002 9:10 pm
Subject: Jaabaaloba Upanishad - Part 1
To: meykandar@egroups.com
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம்
உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தும் பூர்ணமே எஞ்சி
நிற்கின்றது.
[நன்றி:-108 உபநிஷத்சாரம், உரையாசிரியர்: அண்ணா]
அறிமுகம்
- இந்த உபநிஷத் சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்தது.
- இதனைக் கூறியவர் ஜாபோல மகரிஷி ஆகையால் அவரது பெயரைக் கொண்டே வழங்கப்படுகிறது.
- இதில் மொத்தம் ஆறு காண்டங்கள் இருக்கின்றன.
- இந்த ஆறு காண்டங்களுமே உடம்பிலே அமையப்பெற்றிருக்கின்ற முக்தித்தலத்தையும், அம்முக்தித்தலத்தினை அறிந்த ஆன்மாக்கள் எவ்வாறு முக்தி நிலையைப்
பெறுகின்றன என்றும் கூறப்பட்டிருக்கின்றது.
- முக்தியைப் பெற மந்திரங்கள் கருவிகளாக அமைத்திருப்பதால், அம்மந்திரங்களைக் கற்கும் முறையும் ஜபிக்கும் முறையும் கூறப்படுகின்றன.
குறிப்பு: ஜாபாலோப உபநிஷத்தின் முதல் இரண்டு காண்டங்களும் ஒன்றோடொன்று தொடர்புடயவையாக இருப்பதனால் இக்கட்டுரையில் இவையிரண்டும் சேர்த்தே
விவாதிக்கப்படுகின்றன.
இந்த உபநிஷத்தின் கருத்துக்கள் பொதுவாக ஒரு மகரிஷியால்
மற்றொருவருக்கு வழங்கப்பட்ட உபதேசங்களின் தொகுப்பாகவே
அமைத்திருக்கின்றன. பிருகஸ்பதி யாக்ஞவல்கியருக்கு உபதேசிக்கின்றார்.
அந்த விளக்கங்களே முதல் காண்டத்தில் வருகின்றன. அடுத்த காண்டத்தில் அத்ரி
எனும் ஒரு மகரிஷி யாக்ஞவல்கியரைக் கேட்கின்ற கேள்விகளுக்கு அவர்
அளிக்கின்ற பதில்கள் வருகின்றன. (அத்ரி யாக்ஞவல்கியரின் மாணவராக
இருக்கலாம்..??)
முதல் காண்டச் சுருக்கம்:
1. எல்லா உயிரினங்களுக்கும், தாவர வகையிலிருந்து, மனிதர்கள் தேவர்கள்
வரை அனைவருக்கும் பிரம்மஸதனம் என்பது அவிமுக்தம் என்பதே.
2. பிராணனுக்கு முக்கிய ஸ்தானம் குருஷேத்திரம்.
3. ஒரு ஜீவன் உடலை விட்டுப் பிரிகின்ற வேளையில் ருத்ரப் பெருமான் அந்த
ஜீவனுக்கு தாரகப் பிரம்மத்தை உபதேசிப்பார்.
4. அந்த நிலையிலேயே ஜீவன் சாகா நிலையை பெற்று முக்தி பெறும்.
5. அதனால் அவிமுத்தத்தை சேவிக்க வேண்டும்.
இரண்டாம் காண்டச் சுருக்கம்:
1. ஆத்மாவை அறிந்து கொள்ள அவிமுக்தத்தை உபாசிக்க வேண்டும்.
2. ஆத்மா அவிமுக்தத்தில் நிலை பெற்றுள்ளது.
3. அவிமுக்தமே வரணாசி எனப்படுவது. அது புருவ மத்தியில் உள்ளது.
தொடர் சிந்தனை:
தோன்றுகின்ற ஒவ்வொன்றும் அழிவதே நியதி. ஒரு அழிவு வேறொன்றின்
தொடக்கமாகின்றது. ஒன்று முடிந்து வேறொன்று தொடங்கி இப்படியே
எண்ணிலடங்கா வகையில் இச்சுழற்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்ச
இயந்திரத்தை இயக்குகின்ற இறைவன் பேறறிவாளன். அவனே பூரணன்.
மனித உடலெடுத்த யாருமே இறைவனாக முடியாது எனும் எனது கருத்துக்களைக்
கொண்டு கைவல்யோபநிஷத்தின் இறுதிப் பாகத்தை முடித்திருந்தேன். அந்த
விளக்கங்களின் அடிப்படையில், இது (ஜீவன்) ஆதியிலேயே பூரண வடிவான ஒன்று
என்பது மறுக்கப்படக் கூடிய ஒன்றாக ஆகின்றது. பூரணத்தை நோக்கி முக்தி
வேட்கையின் நிமித்தம் ஆன்மா எண்ணிலா முயற்சிகளைச் செய்து பூரணத்தோடு
கலக்கின்றது; இதுவே முக்தி!
முக்திக்குச் சாதனமாக சரியா கிரியா யோக ஞான பயிற்சிகள்
அடிப்படையாகின்றன. அவற்றை மேற்கொள்ள உதவும் கருவியாக
உடலமைகின்றது. உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உருப்புக்களும் அதனதன்
தொழிலை ஞான மார்க்கத்தை அடிப்படையாக்கிக் கொண்டு முறையுடன் இயங்கும்
போது அவை முக்திப்பாதைக்கு இயல்பாகவே ஆன்மாவை வழி நடத்திச் செல்ல
வைக்கின்றன. கருவிகள் இயங்குவது அதனதன் பொறுப்பில் அன்று. மாறாக அதனை
இயக்க வேறொன்று தேவைப்படுகின்றது. கண்கள் பார்க்கின்ற கருவிகள். கண்கள்
மட்டும் இருந்து விட்டால் பார்வை தெரிந்து விடுகின்றதா? காதுகள் கேட்க
உதவும் கருவிகள்; காதுகள் உள்ள எல்லோராலும் கேட்க முடிகின்றதா?
இதனைச் சிந்திக்கின்ற போது இக்கருவிகள் செயல்படவும், அதனால் ஆன்மா
இயங்கவும் வைப்பது எது..? எனும் கேள்வி எழுகின்றது.
ஆன்மாதான் எல்லாவற்றையும் அறிந்து கொள்கின்றதா? அல்லது ஆன்மாவை வேறொன்று
அறிந்து கொள்ள வைக்கின்றதா? ஒன்றைப் பார்க்கின்றோம். எதைப்
பார்க்கின்றோம்; அதனை எப்படிப் பார்க்கின்றோம்; என்பதை நிர்ணயிப்பது
எது?
பரப்பிரம்மம் உடலோடு இணைந்தே இருக்கின்றது. ஆன்மாவை அதன் இச்சை படி
இயங்க சுதந்திரம் அளிக்கும் அதே வேளையில் பக்குவத்திற்கேற்ப ஆன்மாக்களை
அழைத்துச் செல்கின்ற வழிகாட்டியுமாக பரப்பிரம்மம் தொழிலாற்றுகின்றது,
கருணையின் நிமித்தமாக!
சூக்கும வடிவான ஆன்மா உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இல்லாமல், அதன்
அப்போதைய தன்மைக்கேற்ப உடலின் எல்லா பகுதிகளுக்கும் மாறி மாறிச்
செல்லும் தன்மை படைத்தது. அவ்வாறன்றி இறைசக்தியானது, எல்லா அணுக்களிலும்
கலந்திருந்தாலும் குறிப்பிட்ட சில தலங்களில் நிலைப்பெற்றிறுக்கும் தன்மை
கொண்டது (சூக்கும நிலையிலேயே). மூலாதாரத்தில், சுவாதிஷ்டானத்தில்,
மணிப்பூரகத்தில், அநாகத்தில், விசுத்தியில், பின்னர் ஆக்ஞயில், அதன்
பின்னர் சகஸ்ரதலத்தில் என சூக்கும உடலில் நிலையாக இத்தலங்கள்
அமைந்திருக்கும். இந்த ஒவ்வொரு தலங்களுக்கும் மூல அதிபதியாக ஒரு இறைவனும்
இறைவியும் அமைந்திருப்பர். அந்த வகையில் ஜாபாலோபநிஷத் கூறுகின்ற
அவிமுக்தம் அமைந்திருக்கின்ற இடத்தின் மூலதெய்வம் சாதசிவனும்
மணோண்மனியுமாகும். இந்த தலத்தின் மூல யந்திரத்தின் வடிவம் வட்டம். இந்த
யந்திரம் மூன்று இதழ்களுள்ள தாமரை வடிவானது.
நமது இரண்டு கண் புருவங்களுக்கு மத்தியில் இச்சக்கரம் அமைந்துள்ளது. இது
மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண் இருக்கின்ற இடம் என்றும் கூறப்படுகின்றது.
இப்பகுதியே அவிமுக்தம்.
யோக சாதனத்தின் போது சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி பார்வையைக் கூட்டி
அவிமுக்தத்தில் இருத்த வேண்டும். பொறிகளைக் கொண்டு காண்பதை விடுத்து
ஞானக்கண்ணைக் கொண்டு உள்ளிருக்கும் தெய்வத்தை காண முயற்சிப்பதும், கண்ட
அச்சக்தியோடு கலந்திருப்பதுமே தியானத்தின் அதிமுக்கிய நோக்கம்.
யோகப் பயிற்சிகள் பலவகைப் படுவன. அது எவ்வகை பயிற்சியாக
இருப்பினும், பிராணணைக் கட்டுப்படுத்தி சீராக்கி கருத்தினை
ஒருமுகப்படுத்துவதே தியானத்திற்கு அடிப்படையாகின்றது. மிகவும் எளிய
வகையில் தியானப் பயிற்சியை எவ்வாறு மேற்கொள்வது என்பதை அடுத்து
பார்ப்போம்.
1. மனதை தியானம் செய்ய முதலில் தயார் படுத்த வேண்டும்.
2. ஓரிடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து உடலை நேராக வைத்துக் கொள்ளவும்
3. ஒரு விரலால் வலது நாசியை மூடி இடது நாசியினால் 8 எண்ணிக்கை வரும்
வரையில் காற்றினை இழுத்து பின்னர் 8 எண்ணிக்கை வரையில் உள்ளே
வைத்திருந்து பின்னர் 8 எண்ணிக்கைக்கு அதே நாசியில் மூச்சை வெளியாக்க
வேண்டும். அதேபோல இடது நாசியிலும் இதனைச் செய்ய வேண்டும். இவ்வகையில்
உடலுக்குள் உள்ள காற்று சீராகச் சென்று ஆன்மாவை கட்டுக்குள் கொண்டுவருகின்றது.
4. இப்பயிற்சிக்குப் பிறகு கைகளை நீட்டி சின்முத்திரையில் வைக்க
வேண்டும். (இவை நாடிகளை இழுத்து பிராணனை சீர் செய்ய உதவும்)
5. அவிமுக்தத்தில் நமது இஷ்ட பெருமானை நினைத்து அப்பெருமானுக்குரிய
மந்திரத்தை மனதிற்குள் ஜெபிக்க வேண்டும்.
(தியானம் செய்யும் முறை, பிராண வாயு பயிற்சிகள் ஆகிய முக்கிய
விளக்கங்கள் அடங்கிய தமிழ் கட்டுரை ஒன்று எனது வலைப்பக்கத்தில்
இருக்கின்றது. இதனை சித்தர் தருமலிங்க சுவாமிகள் அழகான எளிய தமிழில்
வழங்கியிருக்கின்றார்.) Yoga Nyaanam எனும் பகுதியைப் பார்க்கவும்!
தியானம் செய்வதற்கும், ஜபத்தினை உபாசிப்பதற்கும் எந்தக் கட்டுப்பாடுகளும்
இல்லை. மந்திரங்களை எல்லா நேரங்களிலும் உச்சரித்துக் கொண்டே
இருக்கலாம். சாதரணமாக நமது பெரியவர்கள் 'சிவ சிவ' என்று சொல்லிக்
கொண்டே அமர்வது, இறைவனின் பெயரை மீண்டும் மீண்டும் வழக்கில் சொல்லிக்
கொண்டிருப்பது போன்றவை இந்த வகையில் அமைந்தவை தான். மந்திரங்களைச்
சொல்லச் சொல்ல அம்மந்திரத்தின் மூல தெய்வம் நமது ஆன்மாவை ஆக்கிரமித்து
அதனை வழி நடத்திச் செல்லும் தன்மை வந்தடைந்துவிடும்.
மந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மைப் படைத்தவை. உதாரணமாக,
சிவபெருமானுக்குரிய மூலமந்திரமாகிய 'ஓம் நமசிவாய' என்று
சொல்லப்படுகின்ற மந்திரமானது 'சிவாயநம' என்ற மந்திரத்திலிருந்து
வேறுபட்ட ஒன்று. மந்திரங்களின் பொருளறிந்து முறையாகக் கற்று குருவின்
(ஆசானின்) துணையோடு செய்யும் போது ஜெபம் மேலும் வலுப்பெறுகின்றது.
அவிமுக்தத்தை ஜாபாலோபநிஷத் வரணாசி எனவும் குறிப்பிடுகின்றது என்பதை
மேலே பார்த்தோம். வரணாஒ (உள்நாக்கு) விற்கும் நாசிஒக்கும் இடையில்
என்பதே வரணாசி எனப்படுகின்றது. உடலில் இருக்கின்ற இந்திரியங்களெல்லாம்
செய்கின்ற பாவங்களை போக்கக்கூடியது என்பதால் வரணாஒ என்றும்
அப்பாவங்களை நாசம் செய்வதால் நாசிஒ என்றும் குறிப்பிடப்படுவதாக
உரையாசிரியர் குறிப்பிடுகின்றார். விசுவநாதப் பெருமாள்
குடிகொண்டிருக்கின்ற காசிசேத்ரம் வாராணாசி என்றழைக்கப்படுவதும் இங்கு
குறிப்பிடப்பட வேண்டும். தொன்று தொட்டு பாவங்களைப் போக்க
வாராணாசிக்கு தல யாத்திரைச் செல்வது என்பது நமது பாரம்பரியத்தில்
வழக்கில் இருந்து வருகின்றது. அண்டத்தில் உள்ள வாரணாசியைப் போன்று
இப்பிண்டமாகிய உடலில் அமைந்திருக்கின்ற வரணாசியும் பாவங்களைச்
(ஆன்மாக்களின் கன்மங்களை) சுட்டெரித்து தூய்மைப்படுத்தும் தலமாக அமைகின்றது.
நினைக்கும் நினைவுதொறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைந்தெழுப்பது எக்காலம்?
மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை
நிர்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]
தொடரும்.....
அன்புடன்
சுபா
From: "Narayan Swaminathan"
Date: Sat Apr 20, 2002 7:03 pm
Subject: Re: [meykandar] Jaabaaloba Upanishad - Part 1
அன்பின் சுபா:
இரண்டும் பூர்ணம். சரி.
பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாகியுள்ளது. சரி.
பூர்ணத்திலிருந்து பூர்ணத்தை எடுத்தால் எப்படி பூர்ணம் மிஞ்சும்?
கொஞ்சங்கூட குறையாதோ ?(:-)
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
From: "suba k."
Date: Sun Apr 21, 2002 10:02 am
Subject: Jaabaaloba Upanishad
அன்புள்ள சுவாமி அவர்களுக்கு,
இந்த சுலோகத்திற்காக வழங்கப்பட்டிருந்த விளக்கம் 'அண்ணா' என்பவரால்
தரப்படுவது.அதனை விளக்கத்தின் அடியிலேயே நான் குறிப்பிட்டிருந்தேன்.
> > விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம்
> > உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தும் பூர்ணமே எஞ்சி
> > நிற்கின்றது.
> > [நன்றி:-108 உபநிஷத்சாரம், உரையாசிரியர்: அண்ணா]
என்னுடைய கருத்தானது ஆன்மா பூர்ணமற்றது என்பதே
ஆன்மா பூரணத்தை நாடிச் செல்கின்றது. இதனை விளக்கும் வகையில் கைவல்ய
உபனிஷத் அறிமுகக் கட்டுரை ஒன்றினை பல மாதங்களுக்கு முன்பு 'மெய்கண்டாரில்' வெளியிட்டிருந்தேன். அதன்
காரணத்தால் இக்கருத்தை நான் விரிவாக இக்கட்டுரையில் விளக்க முனையவில்லை.
என்னுடை இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு வெகு விரவில் எனது வலைத்தளத்தில்
சேர்க்கப்படும்.
எது பூர்ணம், ஆன்மா ஏன் பூர்ணத்தை நாடிச் செல்ல வேண்டும் என்பன போன்றவை
மிகவும் சுவாரசியமான விஷயங்கள். அது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று.
அன்புடன்
சுபா
From: Kannan
Date: Sun Apr 21, 2002 8:21 pm
Subject: re. Jabalopa......
அன்புள்ள சுவாமி:
பூரணத்திலிருந்து பிரியும் போது பூரணமே எப்படி மிஞ்சி நிற்கும்?
இதுதான் உங்கள் கேள்வி.
மிக அழகான இந்தியச் சிந்தனையிது. நான் கீழ்க்கண்டவாறு புரிந்துகொள்கிறேன்.
மண்ணிலிருந்து களிமண் எடுத்து பானை வருகிறது. களிமண்ணிலிருந்து வீடு கட்டுகிறோம்.
மண் குறைந்து விடுகிறது உண்மைதான். ஆனால் எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப்
பொருத்து இருக்கிறது !! பிரபஞ்ச நோக்கில் எல்லாம் பூமிக்குள் நிகழும் நிகழ்வுகள்.
எதுவும் எதிலிருந்தும் குறையவில்லை.
அறிவியலில் இயற்கையின் சூட்சுமங்களை பற்றி
அறிந்து கொள்ள, அறிந்து கொள்ள புதிய, புதிய விதிகள் உருப்பெறுகின்றன. உதாரணமாக,
பிரஞ்சத்தைப் பற்றிய நியூட்டனின் விதிகள். இவை முழு முதல் சூத்திரங்கள் என்றில்லை.
ஆனால் பிரஞ்சத்தைப் புரிந்து கொள்ள உதவும் சூத்திரங்கள். நடைமுறையில் மிகவும் ஒத்துப்போகும்
அவரது விதிகள் கற்றை இயற்பியல் (quantum physics) என்று வரும்போது முரண்டு பிடிக்கிறது.
இதுபோல், உபநிடத்திலுள்ள இச்சூத்திரம் இயற்கையின் ஒரு அழகான உண்மையைச்
சுட்டுகிறது. அவ்வளவில் உண்மை. ஆயின் இதன் மீதாக மற்ற கருத்துக்களை வைத்து விவரிக்கும்
போது அது தாக்குப்பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம். அதனதன் எல்லைக்குள் வைத்தே
அவவைகளை புரிந்து கொள்ள வேண்டியது. ஐன்ஸ்டன் கடைசிவரை எல்லாவற்றையும் உள்ளடக்கிய
ஒரு இயற்பியல் விதியை உருவாக்கிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆசைபடுவதில் தவறில்லை,
ஆனால் பிரபஞ்சம் கைக்குள் அடங்க வேண்டுமே?
இதன் ஆழமான சில கேள்விகளுக்கு பிறகு போகலாம். உதாரணமாக.
இப்படி பெரிதாக்கிக் கொண்டே கடைசியாக
ஆக்கியோன் வரை சென்றால், பூரணம் பூரணமாக இருக்குமா?.
'குறையொன்றும் இல்லாத கோவிந்தா!' என்று
ஆண்டாள் இதன் எதிரொலி போல் சொல்கிறாளா? அது எவ்வளவுதூரம் உண்மை?
மெய்கண்டாரின் உள்ளது அழியாது, இல்லது தோன்றாது என்பதற்கும்
இந்த உபநிடத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
வாழ்க.
கண்ணன்
From: "Narayan Swaminathan"
Date: Mon Apr 22, 2002 6:15 pm
Subject: Re: [meykandar] re. Jabalopa......
அன்பின் கண்ணன்:
பூரணத்திலிருந்து பூரணம் எடுக்க பூரணம் எஞ்சும்.
எப்படி ?
கொழுக்கட்டை பூரணம், களிமண் இப்படி
எடுத்துக்காட்டுகளை நினைத்தால் பெளதிகவிதிகள்
படி இது சரியாக தோன்றாது.
பூரணத்துக்கு எடுத்துக் காட்டாக எரியும் விளக்கின்
பிழம்பை சொல்வார்கள். அதிலிருந்து பல புதிய
விளக்குகளை ஏற்றலாமால்லவா? ஏற்ற பயன்பட்ட அந்த விளக்கின்
ஒளிப்பிழம்பில் ஒரு குறைவும் இன்றி இருக்கிறதல்லவா?
எரியும் விளக்குகளின் பிழம்பும் முழுமையாக இருக்குமல்லவா?
ஏற்றப்படும் விளக்கின் குறைபாடுகளால் (ஈரப்பசை,
முறுக்காத நூல் திரி, அருகிலுள்ள மறைப்புகள்)
ஏற்றிய விளக்கின் ஒளி சரியாக இல்லாமல் இருக்கலாம். இக்குறைகள் மெய்ஞ்ஞானத்தை
மறைக்கும் அஞ்ஞானம். இதை நீக்கினால் ஒளி
நன்கு புலப்படும். ஏற்றிய பிழம்புக்கும் ஏற்றப்பட்ட
பிழம்புக்கும் பேதம் தெரியாது. அதிலிருந்து வந்த
இது தனியாக இருப்பது போல் இருந்தாலும்
அதுவும் இதுவும் ஒன்றேதானே ? (அத்வைதம் !).
ஏற்றினால் எரியும் பிழம்பும் குறையுமோ
ஏற்றாவிளக்கில் எரியும் பிழம்பும் தோன்றுமோ
(உள்ளது அழியாது, இல்லது தோன்றாது (:-))
நான் பெரிய ஞானி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.
சும்மா ஒரு சீண்டலுக்கே இதைக் கேட்டேன்.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
From: "Dr. K. Loganathan"
Date: Tue Apr 23, 2002 7:23 am
Subject: Re: [meykandar] re. Jabalopa......
அன்பின் சுவாமி,
மிக அழகாக எளிமையாக இதற்குரிய பொருளை சொல்லியிருப்பதாக எனக்குப் படுகின்றது. டாக்டர் கண்ணன்
சாங்கியம் போற்றிய சைவ வைண சிந்தனைகளுக்கு அடிப்படையான சற்காரிய வாதத்தோடு இணைத்துப்
பார்க்கின்றார். புதிதாக யாதும் இருக்க முடியாது, ஒன்றின் மாற்றுருவே பிறிதொன்றாக இருக்கும் போது
குறைதல் நிறைதல் இல்லாது போகின்றது.
திரு கணேசலிங்கம் ஞானவெட்டியான் போன்றவர் இதனை இன்னும் அலசலாமே?
இந்த சுலோகம் பழந்தமிழ்தான் என்று பல வருடங்களுக்கு முன்பே எனக்குப் பட்டுவிட்டது. அதனை பிறகு தக்க
சான்றுகளோடு விரிவாக விளக்குகின்றேன். ஆயின் இதன் அடிப்படையில் தாங்கள் விளக்கியதுபோல் ஒர்
பொருளைக் காணமுடியும் என்றே நினைக்கின்றேன்.
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
இதனை இவ்வாறும் காணலாம்
ஓம் பூரணம் அதெ பூரணம் இதும் பூரணத்து பூரணம் உதிச்சியதே
பூரணத்திய பூர்ணம் ஆதாய பூரணம் ஏவா வசிஷ்யதே
இங்கு 'அது' 'இது' என்பவையெல்லாம் தமிழின் சுட்டுக்கள் ஆகும். உதிச்சியதே என்பது இன்றும் நல்ல
தமிழ்தான் -- உதி என்ர வேரிலிருந்து பிறந்துள்ளது 'அஸ்ய" என்பது an-ur-as-a என்று சீர்பியத்தில் வரும்
'அஸ்ய" அதாவது அத்த, அத்திய தான். ஆதாய என்பது ஆதல் என்ற கருத்தில் , ஆகினும் வெளிப்படினும் என்று
நிற்கின்றது. ஏவா என்பது சுமேரு ஏ தான், பிரிநிலை ஏகாரம். வசிஸ்யதே என்பது ba-si-a-ta என்பன
போன்ற சுமேருச் சொல்லின் திரிபு எனக்கொள்ள வரும்.
இதன் பொருளை இவ்வாறு கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்,
இந்த உயிர் பூரணமாகலாம், அந்த உயிர் பூரணமாகலாம், பரிபூரணமாகிய இறைவனைடமிருந்தே , அபூரண
ஆன்மாக்கள் பூரணமாகும் வேட்கையைப் பெறுகின்றன; , இக்கருத்து பரிபூரண இறைவனைடமிருந்தே
உதிக்கின்றது. அவ்வாறு அபூரண ஆன்மாக்கள், பரிபூரண இறைவனை அண்டி பூரணம் அடைந்து விட்ட போதிலும்,
அந்தப் பரிபூரணாகிய இறைவன் என்றும் போல் பரிபூரணமாகவே இருக்கின்றான்.
இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் சுபா ஆன்மாக்களக் கொண்டு வந்து அவற்றை அபூர்ணம் என்று
குறிப்பிட்டுள்ளார் என்று நினைக்கின்றேன்.
பரிபூரணாகிய இறைவன் அபூரணங்களாகிய ஆன்மாக்கள் தன்னை அடைந்து பூரணம் உற்றாலும்
என்றும் போல் எவ்விதக் குறையுமின்றி பரிபூரணனாகவேத் தொடர்கின்றான் என்பதே இதன் பொருள் என்று
கொள்ள வேண்டி இருக்கின்றது.
அத்தோடு ஆன்மாக்கள் அபூர்ணம், இறைவன் பூரணம் என்னும்போது, ஆன்மாக்கள் மலமாசுக்களோடு திகழ்கின்ற
பசுக்கள் என்றும் இறைவன் அநாதியே நிமலன் என்றும் படுகின்றது அல்லவா?
இதனைத்தான் சுபா வற்புறுத்துகின்றார் என நினைக்கின்றேன். வேதாந்தச் சிந்தைகளில் இதுபோன்ற கருத்துக்கள்
இல்லை. எல்லாம் மாயந்தான்.
ஏதோ என்னால் முடிந்த ஓர் சிறிய விளக்கம்
உலகன்
From: Kannan
Date: Tue Apr 23, 2002 5:33 pm
Subject: Re..Re: re. Jabalopa......
அன்பின் சுவாமி, லோகநாதன்:
சுருக்கமாக எழுதினேன் முன்பு. சிந்தனை தொடர!
சுவாமி சொல்வதும் அழகாகவே உள்ளது.
கொழுக்கட்டை பூரணத்தை வைத்தும் விளக்கலாம் :-)
I think what is referred is the law of 'conservation of mass'. No mass
is newly created, no mass is really lost.
பூரணத்தைச் சாப்பிட்டால் பூரணம் காணாமல் போவது போன்று தோன்றுவது தோற்றப்பிழை!
அது சாப்பிட்ட ஆளாக உருமாறி இருக்கிறது. அவ்வளவே :-)
சரி, வேறு விதமாக விளங்கிக் கொள்வோம்.
அன்பு இருக்கிறது. அதை ஒருவருக்குக் கொடுப்பதால் குறைந்து விடுகிறதோ?
(ரொம்பப் பேர் அப்படித்தான் என்றெண்ணி சிடு மூஞ்சியாக இருப்பது, வேறு :-)
அளக்க, அளக்க அன்பைப் பொழியும் இறைவன் இதனால் என்றும் குறைபடவே மாட்டான் இல்லையோ?
எனவே அளக்கக்கூடிய பருப்பொருட்களை வைத்துப் பார்த்தாலும் பூரணத்தில் குறைவில்லை.
அளப்பரிய அன்பு போன்ற குணங்களை வைத்துப் பார்த்தாலும் குறைவில்லை. இறைவன் பருப்பொருளோ,
குணமோ மட்டுமல்ல. அவன் அதுவாகவும், அதற்கு மேலும், அது இல்லாமலும் இருக்கும் தன்மையுடையவனாக
உள்ளான். அவனை எப்படிச் சுட்டுவது என்று தெரியவில்லை (இதிலுள்ள பிழையையும் சேர்த்து).
இப்படியே போனால் ஒன்றுக்குப்பின் ஒன்றாக, ஒன்றின் மேல் ஒன்றாக எங்கு போய் முடியும்?
இறைமைக்கு முடிவு உண்டா? பிரபஞ்சத்திற்கு முடிவு உண்டா?
நம்மால் ஊகிக்க முடிந்தது....
நாத்திகனாக இருந்தால் 'முடிவு இருக்கலாம், இருக்காமலும் போகலாம். அது என் கவலை அல்ல'
இறைவன் உண்டு நம்புவன் சொல்வான். இறைவன்தான் முடிவு. அவன்தான் ஆரம்பம்.
'அவன் முடிவின் முடிவு, முதலின் முதல்'
இப்படி யோசித்துக் கொண்டே காலையில் எழுந்ததும் எம் யசோதை பட்ட ஆச்சர்யம் என்னுள்ளும்
எழுந்தது. 'என்ன பிரம்மாண்டம் இது. முழுப் பூரணம் எவ்வளவு பெரியது? ஒன்றுள் ஒன்றாய், பலதில்
பலவாய், அங்கிங்கு எனாதபடி எங்கும் ஆனந்தப் பிரகாசமாய்...'
இன்னும் அந்த பிரம்மிப்பு முடிந்தபாடில்லை.
என்னமாய் எழுதிவிட்டார் அந்த மனுஷன்!
அன்பின்
கண்ணன்